நடப்பு கல்வியாண்டில் இருந்து 5 மற்றும்8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக பாஜக வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வளர்அறி மதிப்பீடு
2019-20-ம் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் வளர்அறிமதிப்பீடு மூலம் 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீடு மூலம் 60 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடக்கும்.
குறுவள மைய அளவிலேயே அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள்கள் மதிப் பீட்டு பணி நடக்க வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆசிரியர்களைக் கொண்டே விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட நடைமுறையை பல அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கல்வி வியாபாரமாகிவிட்டது. மறுக்க முடியாத இந்த உண்மையை மறைக்கவே குழந்தைகளின் அறிவு மீது பழியை சுமத்தி, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தரமான கல்வியை கொடுத்தால் அச்சம் ஏன்? தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.