கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான ஏ.சந்தானகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘கனிமொழி தனது வேட்புமனுவில் கணவரின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் விவரங்களை தெரிவிக்காமல் திட்டமிட்டு மறைத்துள்ளார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, அவர்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்து கனிமொழி தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவர் இந்திய நாட்டின் பிரஜை இல்லை. அவர் இந்தியாவில் வருமான வரி செலுத்தவில்லை என்பதால் அவருடைய வருமான வரி கணக்கு எண் விவரங்களை தெரிவிக்கவில்லை.
எனவே அடிப்படை முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுஎதிர்மனுதாரரான சந்தானகுமார்தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். “இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக தேவையற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து நெருக்கடி கொடுத்து வருகிறது. எங்கள் தரப்பு விளக்கத்தைக் கோராமல் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்கப் போவதாகவும் கூறி வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது உயர் நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது. எனவே உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.
அதையடுத்து நீதிபதிகள், கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.சந்தானகுமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
தமிழிசை வழக்கு வாபஸ்
கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், அதற்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த வாக்காளரான முத்து ராமலிங்கம் தொடர்ந்த வழக்கும் தற்போது நிலுவையில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.