கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவினர் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக 8 இடங்களும், அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒன்று மற்றும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்தத் தேர்தல் ஜனவரி 30-ம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக, உதவி இயக்குநர் உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
இவரது முன்னிலையில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.30-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுவதும் அரசுத் தரப்பு வீடியோகிராபர் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இதில் அதிமுக சார்பில் 3-வது வார்டு உறுப்பினர் சு.கஸ்தூரியும், திமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் மு.பூமாரியும் போட்டியிட்டனர். இதில் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூமாரிக்கு 9 வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில், "எங்களிடம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். எப்படி அதிமுக உறுப்பினர் வெற்றி பெற முடியும்?" என கூறி திமுக வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்தும் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதால், அவர்கள் பசுவந்தனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, "திமுகவினர் 10 பேர் உள்ளனர். 9 பேர் மட்டும் உள்ள அதிமுக எப்படி வெற்றி பெற முடியும்?" எனக் கேட்டார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் தேர்தல் முறைப்படி தான் நடைபெற்றது எனத் தெரிவித்தார். இதனால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்க, அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடருவோம் என கூறிவிட்டு, அங்கிருந்து வெளியே வந்து வார்டு உறுப்பினர்களுடன் பசுவந்தனை சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து ஏ.டி.எஸ்.பி.குமார், கோட்டாட்சியர் விஜயா மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மதியம் சுமார் 12.30 மணியில் இருந்து 2 மணி வரை மறியல் தொடர்ந்தது. அதன் பின்னர் சாலையோரம் உள்ள கடையின் வெளியே கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் திமுக வார்டு உறுப்பினர்கள் மாலை 4 மணி வரை அமர்ந்திருந்தனர். துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் கலைந்து சென்றனர்.
2 பேர் தீக்குளிக்க முயற்சி
திமுகவைச் சேர்ந்த சரவணன், அவரது தாய் லட்சுமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறித்து, தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.