உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம்: கோப்புப்படம் 
தமிழகம்

தொடர்ந்து நடைபெறும் சவுடு மண் கொள்ளை: மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கி.மகாராஜன்

பட்டா நிலங்களில் தொடர்ந்து நடைபெறும் சவுடு மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தல்ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "உயர் நீதிமன்றக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் பட்டா நிலங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. இருப்பினும் விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டா நிலம் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் சவுடு மண் அள்ளப்படுகிறது.

ஏற்கெனவே எடுத்ததில் உபரியான சவுடு மண்ணை அள்ளுவதாகக் கூறி சவுடு மண் எடுக்கப்படுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பட்டா நிலத்தில் உபரி மண் அள்ளத் தடை விதித்தும், சவுடு மணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருவாய் இழப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கவும், புதிதாக பட்டா நிலங்களில் சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு இன்று (ஜன.30) விசாரித்தது. பின்னர் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT