திமுக பனங்காட்டு நரி, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டோம் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று (ஜன.30) முன்னாள் மத்திய இணையமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
"2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். திமுக பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.
என் மீது வழக்குப் போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவப் படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் போட்டோம். எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அது என்னவாயிற்று என இதுவரை இந்த அரசு கேட்டிருக்கிறதா? இல்லை.
நீட் தேர்வே தமிழகத்திற்குள் வராது என சட்டப்பேரவையில் சொன்னார்கள். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் தடுத்து நிறுத்தினார்களா? என்றால் இல்லை.
தஞ்சை டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 2 நாட்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காகப் பாடுபடும் திமுகவுக்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.