மதுபாட்டில் பதுக்கிய வழக்கில் சிறையிலிருப்பவரைத் திருமணம் செய்யப் பெண் சம்மதம் தெரிவித்ததால் அந்த நபருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது. அவருக்கு இன்று திருமணம் நடந்தது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரை மதுபாட்டில் பதுக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று (ஜன.29) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வெங்கடேஷுக்கு இன்று (ஜன. 30) கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து வெங்கடேஷ் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் நீதிபதி செல்போனில் பேசினார். வெங்கடேஷ் மீது வழக்கு இருப்பதால், அவரைத் திருமணம் செய்ய சம்மதமா என அந்தப் பெண்ணிடம் நீதிபதி கேட்டார். அதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து வெங்கடேஷுக்கு ஜாமீன் வழங்கி, அவர் திருமணத்துக்குத் தயாராகும் வகையில், பொதுவாக ஜாமீன் பெற்ற நபரை சிறையிலிருந்து மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்வதில்லை என்ற விதியில் வெங்கடேஷுக்கு விலக்கு அளித்து, அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என சிறை அலுவலர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், இந்தத் திருமணம் மனுதாரரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.