காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்பதற்காக அவரது நினைவு தினத்தை இந்தியா நினைவு கூர்கிறது என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக இருந்த நிலை மாறி, தற்போது ஊடகங்களில் அதிக அளவில் நடைமுறை அரசியல் விமர்சனக் கருத்துகளை வைப்பதில்லை. சமீபத்தில் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என மக்கள் நீதி மய்யம் முடிவெடுத்தது.
ஜன.26 அன்று கிராம சபையை கடந்த ஆண்டு விமரிசையாக நடத்திய மக்கள் நீதி மய்யம் இந்த ஆண்டு வெறும் போஸ்டருடன் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் சமீபகால அரசியல் நிகழ்வு குறித்து கமல் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு, தமிழில் குடமுழுக்கு, காந்தி நினைவு தினம் குறித்து கமல் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
“ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த “தேர்வாணைய மோசடி” பறைசாற்றுகிறது.
மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள்”.
எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழில் குடமுழுக்குக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்:
“மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்க முடிவெடுத்திருப்பதை மெச்சினோம். மக்களுக்குப் புரியும் எந்த மொழியும், சர்வ வல்லமையுமுள்ள கடவுளுக்கும் புரிந்தே ஆகவேண்டும்”.
எனப் பதிவிட்டுள்ளார்.
பின்னர் காந்தி நினைவு தினத்தை நினைவு கூர்ந்துள்ள அவர் கோட்சேவை சமீபகாலமாக ஒருசிலர் கொண்டாடுவதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் தேசபக்த இந்தியரால் கொல்லப்பட்டார் காந்தி எனப் பதிவிட்டுள்ளார்.
நாகரிக உலகில், அரசியலில் விமர்சனக் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் காந்தி கொலை செய்யப்பட்டதையும் நாசுக்காக குறிப்பிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:
“மேம்பட்ட உலகில் தரம் தாழ்ந்த, நியாயமற்ற வடிவத்திலான விமர்சனம் என்பது படுகொலையே. காந்தி அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனது தனிப்பட்ட வழிகாட்டி இந்த நாளில் தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது. நாளை நமதே”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.