தமிழகம்

வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில்: வருமான வரித்துறையிடம் ரஜினி கூறியது என்ன?

செய்திப்பிரிவு

2002-2003 மற்றும் 2004-2005 நிதியாண்டுகளில் தனது வருமானம் பற்றிய விவரங்களை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான விசாரணையை வருமான வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது. தான் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'தி இந்து'வுக்குக் கிடைத்த வரி மதிப்பீட்டு ஆவணங்களின் அடிப்படையில், 2002-2003ல், ரூ 2.63 கோடி வரை ரஜினிகாந்த் கடன் கொடுத்துள்ளதாகவும், அதற்கு ரூ.1.45 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. இப்படி அந்த வருடம் ரூ.1.10 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாகவும், அந்த லாபத்துக்கான வரியையும் தான் கட்டியுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கே.கோபாலகிருஷ்ண ரெட்டி என்பவருக்கு 18% வட்டியில் ரூ.1.95 கோடியும், அர்ஜுன்லால் என்பவருக்கு ரூ.60 லட்சமும், சஷி பூஷன் என்பவருக்கு ரூ.5 லட்சமும், சோனு பிரதாப் என்பவருக்கு ரூ.3 லட்சமும் ரஜினிகாந்த் கடன் வழங்கியுள்ளார். 2003-04க்கான வருமான வரி தாக்கல் செய்யும்போது முரளி பிரசாத் என்பவருக்கு மேலும் ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வருடம், வட்டியாக ரூ.1.99 லட்சம் பெற்றதாகவும், ரூ.1.64 லட்சம் லாபம் கிடைத்தாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2004-05 ஆம் ஆண்டு, ரூ.1.71 கோடியை வாராக் கடனாக தள்ளுபடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த வருடம் ரூ.33.93 லட்சம் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வருமான வரித் தாக்கல் செய்துள்ளார்.

வாராக் கடனுக்கான ஆதாயத்தைப் பெறுவதற்காகவே தான் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக ரஜினிகாந்த் சொல்லியிருக்கக் கூடும் என்று சந்தேகித்த வருமான வரித்துறை, பிப்ரவரி 2005-ல் ரஜினிகாந்தை விசாரித்துள்ளது. 2002-03 மற்றும் 2004-05ல் தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தனது ராகவேந்திரா திருமண மண்டபம் மற்றும் அருணாசலா விருந்தினர் இல்லம் ஆகியவற்றிலிருந்தே தனக்கான வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்த ரஜினிகாந்த், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ படத்தைத் தயாரிக்க லோடஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

அப்போது, நீங்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்கிறீர்களா என்று ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்திருந்த ரஜினிகாந்த், "இல்லை. நான் கொஞ்சம் கடன் கொடுத்திருக்கலாம். ஆனால் அது தொழிலாக அல்ல. என்னிடம் கடன் பெற்றவர்கள் எல்லோரும் என் நண்பர்கள். அவர்களுக்கு நட்பு ரீதியில் கொடுக்கப்பட்ட கடன், தொழில் என்று ஆகாது" என்று கூறியுள்ளார்.

பைனான்சியர் அர்ஜுன்லால் என்பவருக்குக் கொடுத்தப்பட்ட கடன் பற்றிக் கேட்டபோது, அப்படி ஒரே ஒரு முறை ஒரு பைனான்சியருக்குக் கொடுக்கப்பட்ட கடன், தொழிலாக ஆகாது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் கணக்காளர் டி.எஸ்.சிவராமகிருஷ்ணனிடம் விசாரிக்கப்பட்டபோது, "எங்கள் கணக்கின்படி அவர் ஆறு நபர்களுக்குக் கடன் கொடுத்திருக்கிறார். அது வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையிலும், வட்டிக்குக் கடன் தரும் தொழிலுக்கான உரிமத்தை ரஜினிகாந்த் பெறவில்லை என்பது தெரியவந்ததும், நட்பு ரீதியில் மட்டுமே ரஜினிகாந்த் கடன் கொடுத்துள்ளார் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

ஆனால் பின்னர் வருமான வரித்துறைக்கு ரஜினிகாந்த் எழுதிய கடிதத்தில், தான் வட்டிக்குக் கடன் தரும் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.

"வட்டிக்குக் கடன் கொடுத்தால் மட்டுமே கடன் கொடுக்கும் தொழில் என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் அன்று எனது வாக்குமூலத்தைக் கொடுக்கும்போது என்னால் ஒழுங்காகத் தெளிவு தர முடியவில்லை. பின்னர், நான் செய்தது கடன் கொடுக்கும் தொழில்தான் என்பது எனக்குப் புரிய வைக்கப்பட்டது" என்று அதில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

"எந்த நிதியாளரையும் போல நானும் எனது சொந்தப் பணத்தில், வரி கட்டிய எனது வருமானத்தை வைத்துதான் இந்தத் தொழிலைச் செய்கிறேன். எனக்குக் குறிப்பிட்ட அந்த நபரின் மீது இருக்கும் நட்பு, கடந்த கால பரிவர்த்தனையை வைத்துக் கடன் கொடுக்கும் பணத்தின் அளவும், அதன் வட்டி விகிதமும் மாறும். காசோலையாக மட்டுமே இதுவரை நான் கடன் கொடுத்திருக்கிறேன்" என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

எனவே, விஷயங்கள் இவ்வாறு இருக்கும் போது, பிப்ரவரி 14, 2005-ல் ரஜினிகாந்த் திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்துள்ளார். அதில் முன்னதாக ரூ.1.71 கோடியை வாராக் கடன் என்று கூறியதை திரும்பப் பெற்றுள்ளார். இன்னமும் தான் அந்தக் கடன் பணத்தை திரும்பப் பெற முயன்று வருவதாகக் குறிப்பிட்டு, 2004-05ல் தனது வருமானம் உண்மையில் ரூ.1.46 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த மூன்று நிதியாண்டுகளிலும் கணக்குளை மதிப்பிட்ட அதிகாரிகள், ரஜினிகாந்த் கடன் கொடுக்கும் தொழிலில் இல்லை என்பதால் கடன் மூலமாக அவருக்கு வந்த வருமானம் தொழில் மூலம் வந்த வருமானமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று முடிவு செய்துள்ளனர். நட்புரீதியாகத் தரப்பட்ட கடன் மூலம் வந்த வட்டி, மற்ற வழிகளில் வந்த வருமானம் என்றே கருதப்படும் என்று கூறியுள்ளனர்.

இதன் பின் நடிகர் ரஜினிகாந்த் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டு, கடன் கொடுத்ததன் மூலம் தனக்கு வந்த வருமானத்தை தொழில் மூலம் கிடைத்த வருமானமாகவே கருத வேண்டும் என்று டிசம்பர் 2009-ல் உத்தரவு பெற்றுள்ளார்.
வருமான வரி மதிப்பாய்வு ஆண்டான 2006-07-ல் இதே தீர்ப்பாயம் அனுமதித்ததன் பேரில் வாராக் கடன்களுக்கும் உரிமை கோரினார் ரஜினிகாந்த்.

SCROLL FOR NEXT