உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம்: கோப்புப்படம் 
தமிழகம்

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கி.மகாராஜன்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்ய கமுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அமர்வில் அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

இதையடுத்து குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மதுரை வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (ஜன.30) மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் கடந்த ஆண்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குரூப்-4 முறைகேடு வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளது. இந்த தனிப்படை பலரைக் கைது செய்துள்ளது.

குரூப்-4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும்.

எனவே, வருங்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களைக் கண்காணிக்க அரசு தனிக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும். குரூப்-4 பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி தலைவருக்கு உத்தரவிட வேண்டும். குரூப்-4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளைக் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்"

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT