கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக 8 இடங்களும், அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒன்று மற்றும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் 19 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் எஸ்.ஜெயசீலன் மதியம் 12 மணி வரை வரவில்லை. அதன் பின்னர் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், மதியம் 3 மணிக்கு துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மட்டும் நடத்தப்படும் எனவும், தலைவர் பதவிக்கான தேர்தல் வேறொரு நாளில் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு பதவிகளுக்கான தேர்தலும் ஓரே நாளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், இதனை எழுத்துப்பூர்வமாக திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினர்கள் வழங்கினர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் சார்பில் தகவல் பலகையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 30-ம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக, உதவி இயக்குநர் உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
இவரது முன்னிலையில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.30-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுவதும் அரசுத் தரப்பு வீடியோகிராபர் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இதில் அதிமுக சார்பில் 3-வது வார்டு உறுப்பினர் சு.கஸ்தூரியும், திமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் மு. பூமாரியும் போட்டியிட்டனர். இதில் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூமாரிக்கு 9 வாக்குகள் கிடைத்தன.
இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கூட்ட அரங்கு முன்பு அமர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது எனவும் மாலையில் துணைத் தலைவர் தேர்தலுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். எனவே அனைவரும் வெளியேற வேண்டும் எனக்கூறி போலீஸார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அவர்களை வெளியே அனுப்பினர்.
இதையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. குமார் மற்றும் டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பு வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டது. அலுவலகம் அமைந்துள்ள எட்டயபுரம் சாலையில் மங்கள விநாயகர் கோயிலில் அருகேயும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகேயும் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சாலை அடைக்கப்பட்டதால் வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட்டு இருந்தன.