தருமபுரி மாவட்டத்தில் சைவம், வைணவம் என இரு சமய வழிபாட்டையும் இணைந்து வலியுறுத்தும் ஒற்றை நடுகல் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தாசம்பட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இந்த நடுகல் அமைந்துள்ளது. சதிக்கல் வகையைச் சேர்ந்த இந்த நடுகல்லில் பல்வேறு சிற்பங்களுடன், சிவலிங்கம், சங்கு, சக்கரம் ஆகிய உருவங்களும் அமைந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஒரே நடுகல்லில் சிவ, விஷ்ணு வழிப்பாட்டை வலியுறுத்தும் வகையிலான உருவங்கள் அமைந்த நடுகற்கள் இதுவரை அறியப்படவில்லை. அந்த வரிசையில் இரு சமய வழிபாட்டு ஒற்றுமையை குறிக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் அறியப்பட்ட முதல் நடுகல் இதுவே.
குருமன் பழங்குடியின மக்களின் குலதெய்வம்
இதுபற்றி தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் கூறும்போது, ‘தாசம்பட்டியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் இந்த நடுகல் அமைந்துள்ளது. குறுமன் இன மக்கள் இன்றளவும் இங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் உள்ள குறுமனூர் மக்கள் குலதெய்வமாக இந்த நடுகல்லை வணங்குகின்றனர். இந்த நடுகல்லில் பெண் ஒருவர் தலைமீது குவளை ஒன்றை வைத்தபடி நிற்கிறார். அருகில் வீரன் ஒருவன் எதிரியின் குதிரையை வாளால் குத்தி போரிடுகிறான். நடுகல்லின் மேல்பகுதியில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. மேலும், அரசன் சொர்க்கத்தில் உள்ளது போன்றும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வைணவ வழிபாட்டு சின்னங்களான சங்கு, சக்கரம் ஆகியவையும் உள்ளது.
குறுமன் பழங்குடியினர் குறிப்பிட்ட காலம் வரை மூதாதையர்களை மட்டுமே வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர். பின்னர் சமதள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த போது அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களுக்கு மாறத் தொடங்கினர். அப்போது சிவ, வைணவ வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பழங்குடிகளில் அரசியல் எழுச்சி பெற்ற சிலர் அரசாட்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
அதுபோன்ற ஒரு குறுமன் இன அரசன் நிர்வாக ரீதியான சூழலால் போர் நிர்பந்தம் ஏற்பட்டு, குதிரை மீது அமர்ந்தபடி போரிடுகிற எதிரியுடன் போர் புரிகிறான்.
அந்த போரில் குறுமன் இன அரசன் கொல்லப்பட்டு அதைத்தொடர்ந்து அவன் மனைவி சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்ச்சி மூலம் தன்னை மாய்த்துக் கொள்கிறார். அதை குறிக்கும் வகையில் வைக்கப்பட்ட சதிக்கல் வகையைச் சேர்ந்த நடுகல் இது.
போரில் இறந்த அந்த அரசன் சொர்க்கத்தில் உள்ள லிங்கத்தை வணங்கி பின்னர் லிங்கத்திற்கு இணையாக தியானத்தில் அமர்ந்து விடுவது போன்றும் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசனாக வாழ்ந்தது, பின்னர் சொர்க்கத்தில் இருப்பது என வாழ்வின் இரு நிலைகளை உணர்த்தும் இரு அடுக்கு முறை நடுகல் என்ற வரிசையிலும் தருமபுரியில் கண்டறியப்பட்ட முதல் நடுகல் இதுவே.
இந்த நடுகல் 15-ம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று, தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் சுப்பிரமணியன் போன்ற மூத்த வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
தலையில் உள்ள கொண்டை, வேட்டி அணியும் முறை ஆகியவற்றின் மூலம் இதை அவர்கள் உறுதி செய்கின்றனர்.
சிவ, வைணவ வழிபாட்டை இணைந்து வலியுறுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் அறியப்பட்ட முதல் நடுகல் இதுதான். இதுபோன்ற அரிய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்’ என்றார்.