திருச்சி: திருச்சியில் கொலை செய்யப்பட்ட பாஜக பாலக்கரை மண்டல செயலாளர் விஜயரகு வீட்டுக்கு நேற்று சென்ற எச்.ராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் வசூலித்து அளித்த ரூ.50,000 நிதியுதவியை விஜயரகு குடும்பத்தினருக்கு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. அதன் ஓர் அங்கமாகவே விஜயரகு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்தப் படுகொலையை பூசிமொழுக முயற்சிகள் நடைபெறுகின்றன.
தனிப்பட்ட நோக்கத்துக்காக விஜயரகு கொலை செய்யப்பட்டதாக ஐஜி அமல்ராஜ் கூறியதை ஏற்க முடியாது. இது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு குறிப்பு கொடுப்பதுபோல ஆகிவிடும். கோவையில் அமல்ராஜ் காவல் ஆணையராக இருக்கும்போது, சசிக்குமார் கொலை தொடர்பாக பல்வேறு காரணங்களைக் கூறினார். ஆனால், என்ஐஏ விசாரணையில் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலையை நிகழ்த்தியது தெரியவந்தது. எனவே, விஜயரகு கொலையை திசை திருப்பாமல் நேர்மையான அதிகாரிகள் மூலம் நடத்த வேண்டும் என்றார்.