சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று ‘ஜீவராசிகளை பேணுதல்’ என்ற கருத்தில் கஜ வந்தனம், கோ வந்தனம் மற்றும் துளசி வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். 
தமிழகம்

வேளச்சேரியில் 11-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் நாடகம், கலை நிகழ்ச்சிகள்: கரோனா வைரஸ் பாதிப்பு அகலவும் மதநல்லிணக்கம் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை

செய்திப்பிரிவு

சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக பள்ளி மாணவர்கள் நடத்திய நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 410 அரங்குகளையும் பார்வையாளர்கள் நேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கண்காட்சியின் ஓர் அங்கமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் துளசி செடிகளை போற்றி வணங்கும் ‘துளசி வந்தனம்’, ‘கோ வந்தனம்’ (பசு வந்தனம்) மற்றும் ‘கஜவந்தனம்’ (யானை போற்றுவது) ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பெரிய அளவிலான துளசி மாடம் அருகில் கிருஷ்ணர் சிலை, அதைச் சுற்றி பெரிய யானை பொம்மைகள் மற்றும் பசுகன்றுகளுடன் நிற்பது போன்ற பொம்மைகள் அமைத்திருந்தனர்.

நாட்டின் வளமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் துளசி வழிபாடு, துளசி நடனம், நாடகம், கோ-பூஜையை பள்ளி மாணவிகளே நடத்தினர். மேலும் திரு அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தினர் சார்பில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாதிப்பு அகலவும், மதநல்லிணக்கத்தை வேண்டியும் பிரார்த்தனைகளை நடத்தினர். இதில் பல ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வாழும் திருப்போரூர் வேலைக்காரன் சுவாமிகள் பங்கேற்றார்.

கண்காட்சியில் ஈஷா யோகா மையம், சத்ய சாய், வாழும் கலை, காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இஸ்கான், சின்மயா மிஷன், பதஞ்சலி யோகா பீடம்,  நாராயணி பீடம், ராமகிருஷ்ண மடம், சாரதா ஆசிரமம், ஓம்கார ஆசிரமம், பாரத் விகாஸ் பரிஷத், சைவ ஆதீனங்களைச் சேர்ந்தவர்கள், வன்னிய குல சத்ரியர், கொங்கு வேளாளர், யாதவர், தேவேந்திரர், பிரமலைக் கள்ளர், முத்தரையர் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்திய தபால் துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரங்குகள் அமைத்திருந்தனர். கோயில் ரதங்களும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இவற்றை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதேபோல் அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் ஹோமம் நடைபெற்றது. மேலும், ஆரிய சமாஜம் சார்பில் மாணவர்கள் யாகம் வளர்த்தனர். வள்ளலார் அகவல் மற்றும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுமட்டுமின்றி, சவுராஷ்டிரா மற்றும் மராட்டிய சமூகத்தினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இன்று ‘சுற்றுச்சூழலை பராமரித்தல்’ என்ற கருத்தின் அடிப்படையில் மாணவ - மாணவியர் கங்கா மற்றும் பூமி வந்தனம் ஆகிய பண்பு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். மேலும், அகில சிவாச்சாரியார்கள் சங்கத்தினரின் தன்வந்திரி ஹோமம், ஆரிய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 6.15 முதல் 7 மணி வரை கேரள மாநிலத்தைச் சேர்ந்த 500 பெண்களின் திருவாதிரைக் களி நடனமும், 7.15 மணி முதல் 9 மணி வரை மோகினி ஆட்டமும் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT