முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டசாலை மேம்பாலம்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

வண்டலூரில் ரூ.91 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம், வண்டலூர் - மண்ணிவாக்கம் வரையிலான 2.65 கி.மீ. நீள பிரதான சாலையை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் நேற்று திறந்துவைத்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மேற்பார்வையில், சென்னைவெளிவட்ட சாலையை ரயில்வேமேம்பாலத்துடன் இணைக்கும் பல்வழி பரிமாற்ற மேம்பாலம் மற்றும் வண்டலூர் - மண்ணிவாக்கம் வரையிலான 2.65 கி.மீ நீள பிரதான சாலை ஆகியவற்றை முதல்வர் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் அ. ஜான்லூயிஸ், காவல் கண்காணிப்பாளர் கண்ணன், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜகுமார், வண்டலூர் வட்டாட்சியர் வி.செந்தில், வண்டலூர் ஏஎஸ்பி ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியதைக் கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இனி தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT