தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெற்றிருப்பதற்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (ஜன.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது. குறிப்பாக தமிழக அரசு சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் இப்போது மேலும் 2 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் பெற்றிருப்பது தமிழக அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகும். இந்த ஒப்புதலை அளித்திருக்கும் மத்திய அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரிகளையும், அரசு மருத்துவமனைகளையும் அதிக அளவில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமே பாராட்டுக்குரியது. காரணம் அரசு மருத்துவக் கல்லூரியால் தமிழக மாணவர்களுக்குப் பயன் தருவதோடு, அரசு மருத்துமனையினால் இலவசமாக, தரமான மருத்துவ சேவையைப் பொதுமக்களுக்கு அளிக்க முடியும்.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் சேர்த்து 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெற்றிருப்பது பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை முறைகள் கிடைக்கப்பெற்று பெரும் பயன் தரும்.
தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், தமிழக வளர்ச்சிக்காகவும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் ஒப்புதல் பெற்றிருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு அமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் மருத்துவச் சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டில் புதிதாக 9 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மற்றும் இந்த ஆண்டில் இதுவரை புதிதாக 2 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளதால் தமிழகத்தில் உள்ள மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக இருக்கும். இதன் மூலம் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு தமிழகத்தில் அதிக இடங்கள் கிடைக்கும்.
எனவே, தமிழக அரசின் முயற்சியால் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவை இலவசமாக கிடைக்கும். தமிழக மக்களின் நலன் காக்க மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமாகா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.