தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் 43 துறைகள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் பேசியது: மத்திய அரசு திட்டத்திலிருந்து வர வேண்டிய நிலுவைத்தொகை இருப்பதாக தொடர்புடைய துறை அலுவலர்கள் கூறினால், மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவைப் பணிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெறும் திட்டங்கள், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை வழங்கப்பட்ட விவரம், வேளாண்மைத் துறையின் ஒருங்கிணைந்த நீர்வடித் திட்டம், திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், தேசிய நலக் குழு தாய்- சேய் நலத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு திட்டம், ஜனனி சுரக்ஸா திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சமுதாய பங்கேற்பு திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக எம்.பி திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் கரூர் எம்.பி எஸ்.ஜோதிமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைச் செயற்பொறியாளர் பி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல் பிரபு மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறையின் மாவட்ட உயர் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிசிடிவி கேமரா அவசியம்
தொடர்ந்து, கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியது: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களில் ஒருவர்கூட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை அவசியம் பொருத்தி மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கணிசமான நிதி அளிக்க உள்ளேன்.
முதல்வரை சந்திப்பேன்
மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நவீன இயந்திரங்கள், வாகனங்கள், வசதிகளை காவல் துறைக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் குற்றத்தைத் தடுக்க முடியும். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் மேம்பாலம், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், தஞ்சாவூர் சாலையில் அணுகுசாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக தேவைப்பட்டால் தமிழக முதல்வரைச் சந்திப்பேன்.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும். அரசுத் துறைக்கு புதிதாக கட்டப்படவுள்ள தலைமை அலுவலகங்களை திருச்சி பகுதியில் அமைக்க வேண்டும் என்றார்.