பாபு 
தமிழகம்

பாஜக நிர்வாகி கொலைக்கு காரணம் ‘லவ் ஜிகாத்’- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் நடைபெற்றிருப்பது லவ் ஜிகாத் தாக்குதல், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருச்சியில் பாஜக பாலக்கரை மண்டலச் செயலாளர் வரகனேரி பென்சனர்ஸ் தெருவைச் சேர்ந்த பி.விஜயரகு(38), அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது உசேன் மகன் மிட்டாய் பாபு என்கிற பாபு(24) உள்ளிட்டோரால் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் விஜயரகுவின் குடும்பத்துக்கு நேற்று ஆறுதல் தெரிவித்த அர்ஜூன் சம்பத், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

ஓராண்டாக தொந்தரவு

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததோ, மதப் பிரச்சினையோ விஜயரகு கொலைக்கு காரணம் இல்லை என மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

ஆனால், விஜயரகுவின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, முகம்மது உசேன் மகன் மிட்டாய் பாபு என்ற பாபு, விஜயரகுவின் மைனர் மகளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதை தட்டிக்கேட்ட விஜயரகுவின் குடும்பத்தாரை ஏற்கெனவே 2 முறை பாபு தாக்கியிருக்கிறார். இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்ததுடன், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

எனவே, போலீஸார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து விஜயரகுவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தாலோ அல்லது பாபு மீது நடவடிக்கை எடுத்திருந்தாலோ இந்தப் படுகொலை நடைபெற்றிருக்காது. இந்தக் கொலை விவகாரத்தில் உண்மையிலேயே நடைபெற்றிருப்பது லவ் ஜிகாத் தாக்குதல்.

எனவே, இந்தக் கொலையை போலீஸார் சரியாக அணுகவில்லை என்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். விஜயரகு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

டெல்டாவில் தேடுதல் வேட்டை

பாஜக நிர்வாகி விஜயரகு கொலை குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட 5 தனிப்படையினர் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்டிபிஐ கட்சி மறுப்பு

இதற்கிடையே எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ஹசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், விஜயரகு கொலையில் எஸ்டிபிஐ கட்சியைத் தொடர்புபடுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT