தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர். 
தமிழகம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்டா மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், சாக்கோட்டை க.அன்பழகன், டிகேஜி.நீலமேகம், முன்னாள் அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா மற்றும் திமுகவினர், பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், ஹைட்ரோகார்பனை எடுக்க மக்களிடம் கருத்துக்கேட்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது ஜனநாயக விரோதம் என விமர்சித்தனர்.

திருவாரூர், நாகையில்...

இதேபோல திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். எம்எல்ஏ ஆடலரசன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

நாகை அவுரித்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கவுதமன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், எம்எல்ஏக்கள் சிவ.வீ.மெய்யநாதன், பெரியண்ணன் அரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மேடையில் நின்றுகொண்டிருந்த எம்எல்ஏ எஸ்.ரகுபதி மயக்கமடைந்தார். அவருக்கு திமுகவினர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT