சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறை வளாகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.29 கோடியே 50 லட்சம்மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும்மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் (லீனியர் ஆக்ஸிலரேட்டர்) சேவை திறப்பு விழா நேற்றுநடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, இந்த சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்தபடியே ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.22 கோடியே 21 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் சேவையையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், இணைச் செயலாளர்கள் அ.சிவஞானம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, காஞ்சிபுரம், மதுரை, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகியமருத்துவமனைகளிலும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ கருவி அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், புற்றுநோய் நிலை அறியும் கருவிஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு டாக்டர்களின் சம்பளம் உயர்வு குறித்து அரசு பரிசீலித்துஉரிய நடவடிக்கை எடுக்கும். இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன.
எனவே, திருச்சி விமான நிலையத்தில் பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.