கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சாட்சிகள் விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பு, போலி சாட்சிகளைக் கொண்டு வருவதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு அன்று 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் நுழைந்து காவலர் ஓம்பகதூர் என்பவரைக் கொன்று, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சயான், சந்தோஷ், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தோஷ்சமி, உதயகுமார், ஜித்தின்ஜாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சேலத்தில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் சயான் கார் விபத்தில் சிக்கி, அவனது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சிகிச்சைக்குப் பின்னர் சயான் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யபட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், கோடநாடு வழக்கு இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சிகளை விசாரிப்பதாக நீதிபதி வடமலை அறிவித்தார்.
கோடநாடு கொலை வழக்கின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சாட்சிகளான பஞ்சம் விஸ்வகர்மா மற்றும் சுனில் ஆகியோர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் பிறர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், ''இந்தியில் சட்ட நுணுக்கம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். போலீஸார் ஆஜர்படுத்தியுள்ள சாட்சிகள் உண்மையான சாட்சிகளா? என்று விசாரித்த பிறகே விசாரணை தொடங்க வேண்டும்'' என மனுத்தாக்கல் செய்தார். இதை பெற்றுக் கொண்ட நீதிபதி நாளை (ஜன.29) முடிவு அறிவிப்பதாக கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கூறும்போது, ''கோடநாடு கொலை வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரியவில்லை. நாங்கள் விசாரித்தவரை அவர் நேபாளத்தில் உள்ளூர் தகராறில் இறந்துவிட்டதாகத் தெரியவருகிறது. இதனால், அவரைப் போன்றே வேறு ஒரு போலி நபரை ஏற்பாடு செய்ய அரசுத் தரப்பு முடிவு செய்திருந்தது. இதை அறிந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது, உள்ள சாட்சிகளும் போலியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதனால் அவர்களது ஆதார் அட்டை மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் வேலை செய்ததற்கான ஆதாரம் கேட்டுள்ளோம். மேலும், சட்டம் படித்த இந்தி மொழி பெயர்ப்பாளர் மற்றும் மலையாள மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வலியுறுத்தியுள்ளோம். நீதிபதி இது குறித்து முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார்'' என்றார்.