தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
வழக்கறிஞர் நீலமேகம், என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தனர்.
அதில், "குரூப் 4 தேர்வில் மட்டுமல்லாமல், சீருடைப் பணியாளர் தேர்விலும், இதுபோலவே முறைகேடு நடைபெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் சிபிசிஐடி விசாரித்தால், வழக்கின் உண்மை நிலை தெரியவராது.
பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" என முறையிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.