தமிழகம்

மருத்துவமனைகளில் சிறப்பு தனி வார்டுகள்; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு- தமிழகத்தில் ‘கரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் வேகமாகப் பரவுவதால் அங்கிருந்து யாரேனும் நோய் அறிகுறியுடன் வந்தால் சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து தனி மருத்துவக்குழு நியமிக்க சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

நிபா’ வைரஸ், எபோலா’ வைரஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் உலகை அச்சுறுத்தி வருகின்றன. தற்போது அந்த வரிசையில் சீனாவில் 56 பேரை பலி கொண்ட ‘கரோனா’ வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சீனாவில் இருந்து வருவோரை, அனைத்து சர்வதேச நாடுகளும் கண்காணித்து மருத்துவப்பரிசோதனை செய்வதற்கும், அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் அறிகுறியிருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவில் சுற்றுலா, தொழில் மற்றும் கல்வி ரீதியாக ஏராளமானோர் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். அவர்களை, பத்திரமாக மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் இந்தியா திரும்பினால் அவர்களைக் கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனால், தமிழகம் முழுவதும் விமான நிலையங்களை சுகாதாரத்துறையினர் உஷார்ப்படுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து வருவோரை, விமானநிலையங்களில் கண்காணிக்கவும், அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் அறிகுறியிருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது. மதுரை விமானநிலையத்திற்கு நேரடியாக சீனாவில் இருந்து விமானங்கள் இயக்கப்படாவிட்டாலும், மற்ற நாடுகள் வழியாக பயணிகள் மதுரைக்கு வர வாய்ப்புள்ளது.

அதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகள் பெயர், முகவரி மற்றும் அவர்கள் செல்போன் எண்களை வழங்க விமானநிலையத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா கூறுகையில், "சீனாவில் இருந்து விமானத்தில் வருபவர்களைப் பற்றி அலர்ட் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இதற்காக ஒரு குழுவை விமானநிலையத்தில் நியமித்துள்ளோம். சீனாவில் இருந்து வருகிறவர்களை நெருக்கமாக கண்காணித்து, அவர்களுக்குப் பாதிப்பு அறிகுறியிருந்தால் சிகிச்சை அளிக்க உள்ளோம். மேலும், அவர்களுடைய ரத்த மாதிரியை சேகரித்து, கிண்டி, புனே ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அதில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படால் அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்" என்றார்.

இதுகுறித்து மதுரை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ சங்குமணி கூறுகையில், " சிறப்பு தனி வார்டு இன்று அமைத்து வருகிறோம். இவை நாளை தயாராகிவிடும். அங்கு நுரையீரல் மருத்துவ சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் 2 பேர், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் 2 பேர், பொதுமருத்துவ சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் 2 பேர், அதன் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் அடங்கிய தனி மருத்துவக்குழுவை நியமித்து நோயாளி யாரும் வந்தால் சிகிச்சை அளிக்க அவர்களை 24 மணி நேரம் தயாராக இருக்கச் சொல்லி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT