திருநெல்வேலியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2-ம் சனிக்கிழமைதோறும் உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை லோக் அதாலத் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 8-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடத்தப்படவுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கிக் கடன் வழங்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ. நசீர் அகமது ஒட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி சிபிஎம் சந்திரா, திருநெல்வேலி போஸ்கோ சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி. இந்திராணி, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி என். விஜயகாந்த், முதன்மை சார்பு நீதிபதி வி.எஸ். குமரேசன், சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி பத்மா ஆகியோர் பங்கேற்றனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான பி.வி. வஷீத்குமார், வாகன விபத்து இழப்பீடு நீதிமன்ற சார்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி. கெங்கராஜ், நீதித்துறை நடுவர் எஸ். பழனி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரியப்பன், வணிக மேலாளர் சசிகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.