முல்லைப்பெரியாறு அணையில் மத்தியஅரசின் மூவர் கண்காணிப்புக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது.
இதற்காக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், தேனி ஆட்சியருடன் அணையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது.
ஆண்டிற்கு ஒருமுறை அணையை ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மை, தேவைப்படும் வசதிகளை செய்து தருவது இக்குழுவின் பணியாகும். தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்ஷன்ராஜ் உள்ளார்.
தமிழகப் பிரதிநிதியாக தமிழக அரசின் பொதுப்பணித்துறைசெயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள கூடுதல் தலைமை செயலர் விஷ்வாஸ் மேஹ்தா ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி இக்குழு பெரியாறு அணையை ஆய்வு செய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக குறைந்துள்ள நிலையில், அணைப்பகுதியில் செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள், மதகுகளின் இயக்கம், கேலரிப்பகுதியில் கசிவுநீர் ஆகியவை குறித்தும் கண்காணிப்புகுழு நாளை அணையை ஆய்வு செய்யவுள்ளது.
துணைக் கண்காணிப்புக்குழு அவ்வப்போது ஆய்வு செய்து வரும் நிலையில் மூவர் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.
உச்சன்நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பில் பேபி அணையைப் பலப்படுத்தி பின்பு நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதுபோல் 2000-ல் இருந்து அணைப்பகுதியில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. மேலும் தமிழகத்தின் படகை இயக்க முடியாதநிலை உள்ளிட்ட நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன.
எனவே இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தேனி வந்த தமிழக அரசின் பொதுப்பணித்துறைசெயலர் மணிவாசன் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் உடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அணைக்குத் தேவையான வசதிகள், தமிழக விவசாயிகளுக்கு அணைப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.