தமிழகம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய கொள்கை: முதல்வர் தகவல்

செய்திப்பிரிவு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அவர் இன்று பேசும்போது, "அரசின் தொலை நோக்கு கொள்கைகள் மற்றும் மக்களின் தொழில் புரியும் ஆவலான மனநிலை ஆகியவை மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

67,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட, பதிவு செய்யப்பட்ட 11 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 60 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பினை வழங்கி; தமிழ்நாட்டை இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதன்மை மாநிலமாக விளங்கச் செய்துள்ளது.

தமிழ்நாட்டினை ஆசியாவின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகரமாக உருவாக்கிட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும்.

இந்தப் புதிய கொள்கையானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதோடு அல்லாமல், தொலை நோக்கு பார்வை 2023-ன் குறிக்கோளினை எளிதாக அடையவும் வழிவகுக்கும்.

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே உயர் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இத்துறையின் உலக அளவிலான போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் துறை சார்ந்த பன்னாட்டு அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய போட்டித் திறனை மதிப்பிட்டு உலக அளவில் செயல்பட்டு வரும் இத்தகைய தொழில் நிறுவனங்களின், போட்டி திறனுடன் ஒப்பிட்டு சிறந்த நிலை அடைய இந்த ஆய்வு பயன்படும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT