சின்ன வெங்காயம் விலை நிலையாக இருக்கும் என்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக அளவில் சின்ன வெங்காயஉற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக சந்தையில் இந்தியா 18 சதவீதம் பங்களிக்கிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடந்த 2018-19-ம் ஆண்டில் தமிழகத்தில் 0.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப் பட்டு, 3 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80 சதவீதம் சின்ன வெங்காயமும், 20 சதவீதம் பெரிய வெங்காயமும் பயிரிடப்படுகிறது.
திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தேனி, பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. வர்த்தகமூலங்களின்படி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி குறைந்ததால், தமிழகத்துக்கு வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஜூலை-அக்டோபர் மாதம் வரை விதைக்கப்பட்ட சின்ன வெங்காயம், பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
நீடித்த பருவமழையால் பாதிக்கப்பட்டு, சின்ன வெங்காயம் விலை அதிகரித்தது. நடப்பு ஆண்டில் சின்ன வெங்காயம் அறுவடை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து காணப்படும் வரத்தானது, அதிகரித்துள்ள விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை நிலவரத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது.
அதில், 'வரும் மார்ச் இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்துக்கு பண்ணை விலையாக ரூ.50-60 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து காணப்படும் வரத்தைப் பொறுத்தே, விலையில் சிறு மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனடிப்படையில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.