குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது.
முன்னதாக மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதன்பின், அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் இடம்பெற்றுள்ள கண்காட்சி அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார். விழாவில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.