விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சந்தேகம் தெரிவித்து உள்ளார்.
சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர், கடந்த 20-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சிவகாசி பகுதியில் உள்ள பேரநாயக்கன்பட்டியில் அரிசிப் பை தயாரிக்கும் நிறுவனம்ஒன்றில் பணியாற்றி வந்த அசாம் மாநிலம், நல்பேரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரது மகன் மஜம்அலி (20) என்பவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மீரா சங்கர், சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுமியின் வீட்டிலேயே கழிப்பறை வசதி உள்ளது. ஆனாலும், கழிப்பறையை பயன்படுத்திய அனுபவம் இல்லாததால், அச்சிறுமி வெளியே சென்றுள்ளார். அப்போதுதான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் முதலில் கொலைக்கான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் போக்ஸோ சட்டப் பிரிவுக்கு மாற்றி உள்ளனர்.
சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். இந்தச் சம்பவத்தில், ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. போலீஸாரின் நடவடிக்கை மிகவும் தாமதமாக இருந்தது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்கப்படும்.
ஆபாச படம் - 67% குறைந்தது
இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்க இணையத்தில் வெளியாகும் ஆபாசப் படங்கள்தான் காரணம்.
தற்போது இணையதளங்களில் இருந்து ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், தற்போது ஆபாசப் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, இனி பள்ளிகள் மூலம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மீரா சங்கர் கூறினார்.