கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள தீவிரவாதி காஜாமுகைதீனின் மனைவியிடம் பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் அப்துல்சலீம், தவ்பீக் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
3 மனைவிகள்
இந்த தீவிரவாத கும்பலுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமுகைதீன் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் காஜாமுகைதீனின் முதல் மனைவி ராமநாதபுரம் தேவிப்பட்டினத்திலும், மற்ற 2 மனைவிகளில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் ஒருவரும், காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேடு கிராமத்தில் ஒருவரும் வசித்து வருவது, காஜாமுகைதீன் அவ்வப்போது கடலூர்மாவட்டத்தில் உள்ள 2 மனைவிகள் வீட்டுக்கு வந்து செல்வதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது மனைவிகளின் வீடுகளில் என்ஐஏ,க்யூ பிரிவு போலீஸார் மற்றும்மாவட்ட போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளசர்துகுண்டேபால் காவல் நிலையத்தில், தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கில்கைது செய்யப்பட்ட மெகபூப் பாஷா கொடுத்த வாக்குமூலத்தின்படி அவருக்கு காஜாமுகைதீனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு அருகே சர்துகுண்டேபால் காவல் நிலைய குற்றப்பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டர் முருகேந்திரா, தலைமை காவலர் அருண், கடலூர் மாவட்ட சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு மற்றும் போலீஸார் கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள காஜாமுகைதீனின் மனைவி பத்துருண்ணிசா (35) என்பவரிடம் சுமார்2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.