காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமானோர் தேர்வானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவியில் உள்ள 8,888 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து தேர்வு முடிவுகள் செப்டம்பர் 27-ம் தேதி வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதற் கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு போல, காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதிய 130-க்கும் மேலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மையத்தில் பயிற்சி பெற்றவர்களாவர். அங்கு படிக்கும் அனைவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக இடம்பெறும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ச்சி பட்டியலிலும் அவர்கள் எண்ணை பரிசோதித்த போது தொடர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வை போலவே முறையாக விசாரணை நடத்தி தேர்வில் முறைகேடு செய்தவர்களை உடனே தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.