தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா பிப்.5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி, தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில், பல்வேறு துறைகளின் செயலர்கள், காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் என 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, பல்வேறு துறைகளின் செயலர்கள், டிஜிபி திரிபாதி, தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கான புனித நீர் ஊர்வலத்தை இம்மாதம் 31-ம் தேதி நடத்த முடிவெடுத்திருப்பதால், பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, குடமுழுக்கின்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளுக்காக 192 சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும், குடமுழுக்கு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப பல்வேறு பகுதிகளில் எல்இடி திரைகள் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், வாகன நிறுத்துமிடம், பாதுகாப்புக்காக காவல்துறையினர் பணியமர்த்தம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.