தமிழகம்

எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்கின்ற ஒரே தலைவர் ஸ்டாலின்  மட்டுமே: முதல்வர் பழனிசாமி பேச்சு

செய்திப்பிரிவு

எந்தெந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்கின்ற ஒரே எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மொழிப்போர் தியாகிகள் ஆண்டு நினைவுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலவ்ர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“எம்.ஜி.ஆர் இருக்கின்றவரை இந்த ஆட்சியை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட பத்தரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்குத் தந்தார்கள். அவர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கினார்கள்.

அதன் மூலம் ஏழைகள், அடித்தட்டில் வாழ்கின்ற மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெற்றன. பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு, இந்த இயக்கம் உடைந்துவிடும், கட்சி கவிழ்ந்துவிடும் என்று மறைந்த கருணாநிதி கனவு கண்டார்.

அதற்கு மாறாக, அம்மா எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்க வேண்டுமென்பதற்காக உடைந்த கட்சியை ஒன்று சேர்த்தார். 1991-ல் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை அமைத்த பெருமை அம்மாவைச் சாரும். 1989-ல் கட்சி பிளவுபட்டு இரண்டு அணியாக நாம் மக்களை சந்தித்தோம். அப்பொழுது நான் அம்மா அணியில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்பொழுது சேவல் சின்னத்தில் எடப்பாடியில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றேன்.

ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்கிறார். ஆளுமை திறன்மிக்க மாநிலமாக மத்திய அரசு தமிழ்நாட்டை தேர்வு செய்திருக்கிறது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில், துறைவாரியாக மதிப்பெண் கொடுத்து தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஸ்டாலினால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்சன் என்ற காவல்துறை அதிகாரி சோதனைச்சாவடியில் பணியில் இருக்கும்போது தீவிரவாதிகள் சுடப்பட்டார்.

இப்படிப்பட்ட சம்பவம் நடக்கின்றதே எப்படி அவர்களுக்கு விருது கொடுக்கின்றார்கள் என்று கேட்கின்றார். ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ந்தெடுக்கிறார்கள், இந்த விஷயம்கூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை. எந்தெந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்கின்ற ஒரே எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் .

கன்னியாகுமரியில் அன்மையில் நடைபெற்ற உதவி ஆய்வாளர் வில்சன் துயரச்சம்பவத்தை எதிர்கட்சித்தலைவர் விமர்சித்துள்ளார். அவர்களது 1996-2001 ஆட்சியில், கோவையில் நடுரோட்டில் காவலர்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதே காலகட்டத்தில் அங்கே பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அத்வானி கோவைக்கு வந்தபொழுது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது, அதில் பல பேர் உயிரிழந்தனர். அப்பொழுதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருந்தது என்பது நாட்டுமக்களுக்குத் தெரியும் ஸ்டாலின் அவர்களே.

இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு தொடர்ந்து இரண்டாண்டு காலம் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு பேணிக்காப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று விருது வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நானே நேரடியாக டெல்லிக்குச் சென்று குடியரசு துணைத்தலைவரிடமிருந்து பெற்றேன். இந்த ஆண்டு மீன்வளத் துறை அமைச்சர் அங்கே சென்று விருதைப் பெற்றார். 21.10.2019 அன்று வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகப் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது. நாம் சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதன் மூலமாக இவையெல்லாம் சாத்தியமாயிருக்கிறது. சென்னை மாநகரம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. இன்றைக்கு காவல்துறை நவீன முறையில் பல திட்டங்களை வகுத்ததன் காரணமாக சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச்சம்பவங்களை கண்டுபிடித்து வருகிறோம்.

ஆகவே குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் ஸ்டாலின் குற்றச் சம்பவங்களே நடக்கவில்லையா என்று கேட்கிறார், குற்றம் நடக்காத இடம் உலகிலேயே எதுவுமில்லை. குற்றங்கள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள மாநகராட்சி எல்லா பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்துகின்ற பணியை நாங்கள் துவக்கியிருக்கின்றோம்.

எங்கேயும் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும். அதிகமாக போக்குவரத்து இருக்கின்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. படிப்படியாக நகராட்சிப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தமிழகத்தை குற்றம் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்குவதற்கு எங்களுடைய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஸ்டாலின் அமைச்சராக இருந்தபொழுது மற்றும் அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது எத்தனை விருதுகள் பெற்றார்கள் என்பது நாட்டுமக்களுக்குத் தெரியும். இன்றைக்கு தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியதற்கு பல்வேறு விருதுகளை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். ஊரக வளர்ச்சித் துறையில் 104 தேசிய விருதுகள் பெற்றிருக்கிறோம், சிறப்பான அரசு என்பதற்கு இதுதான் சான்று.

ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடமும், முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

தரமான மருத்துவ சேவைகள் மற்றும் உடல் உறுப்பு மாற்றில் சிறந்த முறையில் செயல்பட்டதற்கான தொடர்ந்து 5ம் முறையாக தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. பொது விநியோக திட்டத்தை கணினிமயமாக்கியதில் விருதினை பெற்றிருக்கின்றோம். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறைக்கு விருதினை பெற்றிருக்கின்றோம்.

தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தால் 2018-19ஆம் ஆண்டில் அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கிய வகையில் சிறந்த மாநில முகமை அமைப்பாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருது 3.12.2019 அன்று வழங்கப்பட்டு நாம் பெற்றிருக்கின்றோம்.

இந்தியாவிலேயே சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திய மாநிலத்திற்கான விருதினை பெற்றிருக்கின்றோம். "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தினை செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது, என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது”.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT