தகவல் தொழில்நுட்பத்துக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் இன்று மாலை சரியாக 4.52 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடு களும் ஸ்ரீஹரிகோட்டா விண் வெளி ஏவுதளத்தில் தயாராக உள்ளன.
அமெரிக்கா உட்பட உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ் எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக இஸ்ரோ பல்வேறு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.
அந்த வரிசையில், தற்போது, தகவல் தொழில்நுட்பத்துக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி டி-6 ராக் கெட் மூலம் இன்று மாலை 4.52 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
ராக்கெட் ஏவுதல் திட்ட ஆயத்த ஆய்வுக்குழுவும், ஏவுதல் அதிகாரக்குழுவும் ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஒப்புதல் அளித்த நிலையில், 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.52 மணிக்கு தொடங்கியது.
முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இது 3-வது முறை ஆகும். 49 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்டின் மொத்த எடை 416 டன் ஆகும். அது விண்ணில் செலுத்த இருக்கிற ஜிசாட்-6 செயற்கைக்கோளின் மொத்த எடை 2,117 கிலோ ஆகும். இதில், எரிபொருள் எடை மட்டும் 1,132 கிலோ எஞ்சிய 985 கிலோ கருவிகளின் எடை ஆகும்.
ஜிசாட்-6 செயற்கைக் கோளில் எஸ்-பேண்ட் தொலைத் தொடர்புக்கு உதவும் ஆண்டெனா பொருத்தப்பட்டுள்ளது. 6 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஆண் டெனா, இஸ்ரோ இதுவரை தயாரித்தவற்றில் மிகப்பெரியது ஆகும்.
ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத் தப்பட்ட 18 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர், அதிகபட்சம் 35,975 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தற்காலிக சுற்றுப்பாதையில் விடப்படும். அதன்பிறகு அந்த செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள் படிப்படியாக நிலைநிறுத்தப் படும்.
இதற்கான கட்டுப்பாட்டு பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் ஹசன் கட்டுப் பாட்டு மையம் மூலம் மேற் கொள்ளப்படும். ஜிசாட்-6 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் ஆகும்.