"வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது" என மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
முன்னதாக, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் கார் மீது தேனியில் முஸ்லிம் அமைப்பினர் கருப்புக் கொடியுடன் தாக்குதல் நடத்தினர்.
தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் சென்ற போது இச்சம்பவம் நடந்தது. இதனைக் கண்டித்து தேனியில் ஆங்காங்கே அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் பேசிய அவர், "வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ஒருவேளை அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் பிடிக்கவில்லை என்றால் அதை சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். இல்லை தங்களின் உணர்வில் இருக்கும் நியாயத்தை நிரூபிக்க வேஎண்டும். அதைவிடுத்து அதிமுக எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் மீது தாக்குதல் நடத்தும் கதையெல்லாம் இங்கு எடுபடாது. அதே வன்முறையை எங்களுக்கும் செய்யத் தெரியும். அந்த அளவுக்கு அதிமுக தொண்டர்களும் கோழைகள் இல்லை. நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம்.
இத்தகைய தாக்குதல்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே தூண்டி விடுகின்றன" என்றார்.