ஆவடி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை செல்லும் வெளிவட்டச் சாலையில் நேற்று அதிகாலை 1:45 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள், சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வேப்பம்பட்டைச் சேர்ந்த அசோக்(28) என்பவரைப் பின் தொடர்ந்து, நெமிலிச்சேரி அருகே வழிமறித்து, அரிவாளால் வெட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.300 ரொக்கத்தை பறித்தனர்.
பின்னர் அந்த நபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில், ஆவடி அருகே பாலவேடு பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடிக்குச் சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றில் ஓட்டுநர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில், ஒரு லாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநரான வேலூர், காட்பாடியைச் சேர்ந்த சிவகுமார்(37) என்பவரை மர்ம நபர்கள் தாக்கி அவரது செல்போனைப் பறித்தனர்.
அங்கு சுங்கச்சாவடியில் காவலாளியாக பணிபுரியும் திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த வெங்கடேசன்(50) இதைத் தடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள், இரும்புக் கம்பியால் வெங்கடேசனை தலையில் தாக்கினர். இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், மற்றொரு லாரி ஓட்டுநரான திண்டிவனம், ஒமண்டூரைச் சேர்ந்த நரேஷ்குமார்(22) என்பவரை மிரட்டி செல்போன், ரூ.4,000 ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து, தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படுகாயமடைந்த சிவகுமார் மற்றும் ஐடி ஊழியர் அசோக் ஆகியோரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொலை, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற சில மணி நேரங்களில், வேப்பம்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செவ்வாப்பேட்டை போலீஸாரிடம் சிக்கினார்.
அவர்களிடம் கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.