ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி பதவியேற்றார். அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.
அதன்படி,பிப்ரவரி 18-ம்தேதி சட்டப்பேரவையில் முதல்வர்பழனிசாமி தனது தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் க.பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும்முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பழனிசாமி வெற்றி பெற்றார்.
திமுக மனு
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது’’ என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.
நீண்ட காலமாக நிலுவை
இதை எதிர்த்து திமுக மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் நேற்று ஆஜராகி, ‘‘மணிப்பூர் வனத்துறை அமைச்சர் ஷியாம்குமாரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், இதுதொடர்பான மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மாநில பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பேரவைத் தலைவரின் அதிகாரம் குறித்தும் நாடாளுமன்றத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் அடிப்படையில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கிலும் நாங்கள் வாதிட வேண்டியுள்ளது. எனவே, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மணிப்பூர் அமைச்சர் ஷியாம்குமாரின் தகுதி நீக்கம் வழக்கில், 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க மாநில பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், இந்த வழக்கை நாங்கள் வாதிட வேண்டியுள்ளது.