தமிழகம்

நாகரிக அரசியலை நடைமுறைப்படுத்த அதிமுக, காங்கிரஸ் முன்வர வேண்டும்: தமிழருவி மணியன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

நாகரிக அரசியலை நடைமுறைப்படுத்த அதிமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முன்வர வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

ராகுல் காந்தியை வரவழைத்து திருச்சியில் மக்கள் கூட்டத்தை திரட்டியதும், கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாகப் பேசி வருவதும் அவரது தலைமைக்கு மதிப்பை தேடித் தந்தன.

இந்நிலையில் பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை இளங்கோவன் வர்ணித்த விதம் நாகரிகமற்றது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் அதிமுகவினர் நடத்தும் எதிர் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

வாய்தவறி வந்த வார்த்தைகள் என இளங்கோவன் வருத்தம் தெரிவித்தால் அது அவரது தலைமைப் பண்புக்கு பெருமை சேர்க்கும். ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் மீது அடிக்கடி அவதூறு வழக்குகள் போடுவதை தவிர்த்தால் ஜனநாயகத்தின் நடைமுறைகளைப் பேணி காப்பவர் என்ற நற்பெயர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்து சேரும்.

எனவே, நாகரிக அரசியலை நடைமுறைப்படுத்த அதிமுக, காங்கிரஸ் இரு கட்சிகளும் முன்வர வேண்டும்'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT