ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசர அவசியம்; ராமதாஸ்

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது தான் அவசர, அவசியம் ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய 9,398 பணியிடங்களுக்கு 01.09.2019 அன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டு 24 ஆயிரத்து 260 நபர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாகத் தெரிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியது. அதில், 99 தேர்வர்கள், இடைத் தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத் தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணிநேரங்களில் மறையக் கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் டிஎன்பிஎஸ்சி தன் விசாரணையில் தெரியவந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதத் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி இன்று (ஜன.24) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியதுதான் அவசர, அவசியம் ஆகும். அதுகுறித்துப் பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் முறைகேடுகள் இல்லாத, நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT