தமிழக அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு சான்றிதழ் தர வேண்டியது இல்லை. கூட்டணி தர்மம் இருப்பதால் மவுனமாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நாகர்கோவிலில் பொன்.ாதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு சான்றிதழ் தர வேண்டியது இல்லை. கூட்டணி தர்மம் இருப்பதால் மவுனமாக இருக்கிறேன். நேரில் ஜெயக்குமாரிடம் சில விஷயங்களை பேச உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? தற்போது ரஜினியை எதிர்த்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். திமுகவினருக்கு வேறு அரசியல் தெரியாது. பத்திரிகைகளில் வெளிவந்ததைத்தான் சுட்டிக்காட்டி ரஜினி பேசினார்.
6 எம்எல்ஏக்கள் மவுனம்
வில்சன் கொலையை மறைக்க முற்படுபவர்களுக்கும் அவரது கொலையில் பங்குள்ளது. இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்கள், எம்.பி., ஆகியோர் இதுவரை மவுனம் சாதிக்கின்றனர். காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும், தங்களது பதவியை துறக்க வேண்டும். தீவிரவாதிகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எதற்காக பதவி வகிக்க வேண்டும்?
பயத்தை தூண்டிய காங்கிரஸ்
குடியுரிமை சட்டம் குறித்து இல்லாத பயத்தை காங்கிரஸ் கூட்டணியினர் தூண்டியதன்காரணமாகவே வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பின்னர், எஸ்.ஐ. வில்சனின் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.