தமிழகம்

புதுச்சேரி முன்னாள் பேரவைத் தலைவர் கொலையில் தொடர்புடைய எழிலரசி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான எழிலரசி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணனின் 2-வது மனைவி எழிலரசி. தொழில் போட்டி காரணமாக 2013-ல் ராமு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், புதுச்சேரி முன்னாள் பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமாரும் காரணம் என எழிலரசி தரப்பினர் கருதினர்.

இதையடுத்து ராமு கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அய்யப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா ஆகியோர் 2015-ல் கொல்லப்பட்ட நிலையில், 2017-ல் நிரவியில் வி.எம்.சி.சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி பிறகு ஜாமீனில் வெளிவந்த எழிலரசி, காரைக்கால் நேதாஜி நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் எழிலரசி மீது மிரட்டல் புகார் வந்ததையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என கருதி, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்பேரில் நிரவி போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று எழிலரசியை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில்அடைத்தனர். ஏற்கெனவே, 2018-ல்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழிலரசி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்புப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT