தமிழகம்

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மாநகராட்சி உருவாக்கிய விதிகளுக்கு அரசு அனுமதி: குப்பைகளை அகற்ற இனி கட்டணம் வசூலிக்கப்படும்

செய்திப்பிரிவு

திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சென்னை மாநகராட்சி உருவாக்கிய துணை விதிகளை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனி, குப்பைகளைஅகற்ற மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு குப்பைகளை அகற்றும் பணி பெரும் சவாலாக உள்ளது. இதற்கு தீர்வுகாண, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதில், குப்பைகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள், அவர்களே கட்டணங்களை நிர்ணயிக்க துணை விதிகளை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த துணை விதியில் கூறியிருப்பதாவது:

குப்பைகளை உருவாக்குவோரிடம், அதை அகற்றுவதற்கான சேவை கட்டணமாக குடியிருப்புகளுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரிக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.120 முதல் ரூ.600 வரையும், குடியிருப்பு அல்லாத, குடியிருப்புகள் உள்ளடங்கிய கட்டிடங்களுக்கு ரூ.300 முதல் ரூ.6 ஆயிரம் வரை வசூலிக்க வேண்டும்.

குப்பையை வகை பிரிக்காமல் வழங்குவது, பொது இடங்களில் வீசுவது, கட்டுமானக் கழிவுகளுடன் வீட்டு கழிவுகளை கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், குடியிருப்புகளுக்கு ரூ.1000, குடியிருப்பு அல்லாதவைக்கு ரூ.2 ஆயிரம், வர்த்தகர்களுக்கு ரூ.1000, நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குப்பையை ஏற்படுத்தினால் ரூ.25 ஆயிரம், தெருவோரக் கடைகளில் குப்பைத் தொட்டி வைக்காவிட்டால் ரூ.100, தோட்டக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்படும். இதற்கான பணிகளை அந்தந்தப் பகுதிசுகாதார ஆய்வாளர் மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்ற சேவை கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.64 கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அதை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த துணை விதிகளை செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்கு, மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.

SCROLL FOR NEXT