சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விபின்(59). தெற்கு ரயில்வேயில் கார்டாக பணியாற்றி வந்த இவர், பணியில் இருந்தபோதே, துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பசவ ராம தாரகம் நினைவு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு எல்எல்பி படித்தார்.
ரயில்வே பணியில் இருந்தஅவர், கல்லூரிக்கு செல்லாமலேயே போலியான வருகைப்பதிவு பெற்று சட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், வருகைப்பதிவு இல்லாத காரணத்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் லஞ்சம் கொடுத்து பதிவு செய்ய முயன்றதால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விபின் மற்றும் வழக்கறிஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். அதில், விபின் படித்த கல்லூரியின் முதல்வர், அவருக்கு வருகைப்பதிவேடு போலியாக தயாரித்து, சான்றிதழ் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சட்டக்கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமாரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.