தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது.குடமுழுக்கு விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விழாவில் 10 லட்சத்துக்கும்மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாட்டை கண்காணிக்கதலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை அலுவலகத்தில் துறையின் ஆணையர் க.பணீந்திரரெட்டிதலைமையில் நேற்று உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், குடமுழுக்குவிழாவை தமிழில் நடத்துவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா?, கடந்த காலங்களில் எத்தகையநடைமுறைகள் பின்பற்றப்பட்டுள் ளன என்பன உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் குறித்து ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தஞ்சை பெரிய கோயிலில் காலம்காலமாக தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடந்துள்ளது. எனவே, இம்முறையும் இரண்டிலும் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த விவரங்கள் அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அந்த அறிக்கையை நீதிமன்றம் மற்றும் தமிழக அரசிடம் சமர்ப் பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT