இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ் ஆன சீனியர் மாணவர்கள் தேர்வில் பங்கேற்று வெற்றிப்பெறுவது, அதிகளவில் மதிப்பெண் எடுக்கும் போட்டி காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்காக தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டிலிருந்து 1,17,502 மாணவர்களும், கேரளாவிலிருந்து 1,16,010 மாணவர்களும் , கர்நாடகாவிலிருந்து 1,19,629 மாணவர்களும், மகாராஷ்டிராவிலிருந்து 2,28,829 மாணவர்களும், உத்தரப் பிரதேசத்திலிருந்து 1,54,705 மாணவர்களும், ராஜஸ்தானிலிருந்து 1,38,140 மாணவர்களும், என மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
2020-ம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து 1,17,502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டில் விண்ணப்பித்தவர்களைவிட 17 சதவீதம் குறைவு. 2019-ம் ஆண்டு 1,38,997 பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதியவர்களில் 59,785 பேர் தகுதி பெற்றனர். 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1,07,288 மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து 39.56 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.
நீட் தேர்வினை எழுதிய மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்றதால், அந்த அளவுக்கு போட்டிப்போட முடியாது என இந்த ஆண்டு விண்ணப்பிப்பதில் தயக்கம் உள்ளது. அதிலும் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சிப்பெற்றோர் பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிளஸ்டூ பாஸான சீனியர் மாணவர்கள் ஆவர்.
சீனியர் மாணவர்களே விண்ணப்பித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் இந்த ஆண்டு படிக்கும் புதிய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கவில்லை. எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான மதிப்பெண் உயர்வதால் சிபிஎஸ்சி மாணவர்களுடன் போட்டிப்போட முடியாது என மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி 4,202 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதில் 70 சதவீதம் பேர், அதாவது சுமார் 3000 மாணவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் பிளஸ்டூ பாஸான சீனியர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.