'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்' என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள உதவி ஆணையர் மற்றும் உதவி தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, "டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் இந்து அமைப்பினர் நடத்தியுள்ளனரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஜேஎன்யு.,வில் மாணவர்கள் போர்வையில் மாணவர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் இருந்தனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள்" என்றார்.
ஆர்எஸ்எஸ் கூறியதைத்தான் ரஜினி செய்து உள்ளார் என சில அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், "ஆர்எஸ்எஸ் என்ன பயங்கரவாத அமைப்பா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்? மகாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. ஆர்.எஸ்.எஸ். அல்ல. எனவே கோட்சேவைத் தான் கொலையாளியாக பார்க்க வேண்டும். கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்பவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்.,காரர்களா? " எனக் காட்டமாகக் கேட்டார்.
தொடர்ந்து, முதல்வர் பதவியை ஓபிஎஸ்க்கு விட்டுத் தருவாரா எடப்பாடி என துரைமுருகன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "முதல்வர் பதவி குறித்து எடப்பாடி பேசியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் பேசி வருகிறார்" எனப் பேசினார்.
ஆன்மிகத்துக்கு ரஜினி; பகுத்தறிவுக்குப் பெரியார்..
பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் அமைச்சராயிருக்க முடியாது. அவர் கூறிய பகுத்தறிவு கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை.
திமுகவின் முகமூடிதான் தி.க. ரஜினி கூறியது தவறு என்றால். அதை விமர்சித்துவிட்டுப் போக வேண்டியது தானே. அதை விடுத்து மிரட்டுகிறார்கள். இந்துக்கள் இளிச்சவாயர்கள் அல்ல. சில காலம் முயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். இடையில் சற்று இளைப்பாறி விட்டோம். இப்போது வேகமெடுத்துள்ளோம்.
எங்கள் இலக்கு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல். அதுதான் கிளைமாக்ஸ்" என்றார்.