நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; பெரியார் தொடர்பான கருத்தை திரும்பப் பெறுக: ரஜினிக்கு நாராயணசாமி அறிவுரை

செ.ஞானபிரகாஷ்

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் தொடர்பாகப் பேசிய கருத்தை திரும்பப் பெற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, "பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளைப் போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார்.

நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்தச் சம்பவம் நடந்ததா? என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அவர் கருத்தை திரும்பப் பெற்று இந்தச் சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT