வேல்முருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: நாடு தழுவிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்; வேல்முருகன்

செய்திப்பிரிவு

5 ஆம், 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று (ஜன.23) வெளியிட்ட அறிக்கையில், "மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தும் கூட, வர்ணாசிரம சனாதனக் கல்வித் திட்டத்தை நிராகரிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் நானே முந்தி என்பதாக அதை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது அதிமுக அரசு.

இந்தக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வுதான் நடத்தப்படும் என்றும் அரசாணையே விடுத்திருக்கிறது அதிமுக அரசு. இந்தத் தேர்வுக்கு, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணமும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனப் பிள்ளைகளை பொதுத்தேர்வு மூலம் அரும்பிலேயே அதாவது குழந்தைப் பருவத்திலேயே கல்வி கற்பதினின்றும் கிள்ளி எறியும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வர்ணாசிரம சனாதனக் கல்வித் திட்டத்தைத்தான் அமல்படுத்துகிறது அதன் அதிமுக அரசு. இதற்குக் காரணம், மொத்த அமைச்சரவையே ஊழலினின்றும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே என்பதுதான். இது அவர்களுக்கு வேறு வழியே இல்லாத ஒரு நிர்பந்தம் அன்றி வேறல்ல.

இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, 5 ஆம், 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு என்னும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு எச்சரிக்கிறது. இல்லையெனில் நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும் எனவும் எச்சரிக்கிறோம்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT