வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அரசியல் கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் பெல்ட் அணிந்து வரக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்று திண்டுக்கல் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, சில்வார்பட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சி முகவர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியதாவது: வாக்கு எண்ணுவதை நேரடியாக தலைமை தேர்தல் அதிகாரிகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் வேட்பாளர்கள், முகவர்கள் நடவடிக்கை, தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க கேமராக்கள் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் கண்காணிப்பார்.
மின்னணு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை. இயந்திரத்தில் எத்தனை வாக்குகள், யாருக்கு பதிவாகி இருக்கிறதோ? அந்த வாக்குகள்தான் தெரியும். வாக்குகளை எண்ணும்போது சிறுசிறு தவறுகள் நடந்தால் உடனடியாகச் சொல்லலாம். அந்தத் தவறுகள் திருத்தப்படும். அதற்காக சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கத்திரிக்கோல், செல்போன் கொண்டுவர அனுமதியில்லை. வேட்பாளர்கள், முதன்மை முகவர் ஒருவருக்கு மட்டுமே செல்போன் எடுத்துவர அனுமதி உண்டு. அவர்களும் செல்போனை வாக்கு எண்ணிக்கை அறையில் பயன்படுத்தக்கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் உள்பட யாரும் பெல்ட் அணிந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களை, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எடுத்து வர அனுமதியில்லை. எதிரே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டுத்தான் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளே வரவேண்டும் என்றார்.