ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

சிவன் தமிழில் உரையாடினார் என்பது நம்பிக்கை; குடமுழுக்கை தமிழில் செய்வதே சரி: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய கோயில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வரும் பிப்.5-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் எனவும், சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் இக்கோரிக்கையை முன்வைத்ததையடுத்து, திமுக, மதிமுக, இடதுசாரி ஆகிய கட்சிகளும் இக்கோரிக்கையை ஆதரித்தன. இதனை வலியுறுத்தி, கோரிக்கை மாநாடும் தஞ்சையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதே கோரிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜன.23) தன் ட்விட்டர் பக்கத்தில், "தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!

சிவபெருமான் தமிழ்நாட்டில்தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT