தமிழகம்

காரில் வந்து மளிகைக் கடையை உடைத்த கொள்ளையர்களை சுற்றி வளைத்த காரமடை கிராம மக்கள்: தொடர் திருட்டைக் கண்டித்து சாலை மறியல்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் காரமடை அருகே காரில் வந்து, மளிகைக் கடையை உடைத்து பொருட்களைத் திருடிய கும்பலை வளைத்த கிராம மக்கள், சிக்கிய ஒருவரைப் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர் திருட்டைத் தடுக்க தவறியதாக காவல்துறை மீது புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரமடை அருகேயுள்ள சின்னதொட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பூட்டிக் கிடக்கும் வீடு மற்றும் கடைகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடிப்பது, நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, கால்நடைகளை திருடிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தன.

இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் இளைஞர்கள் குழுவாக இணைந்து இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், சின்னதொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்களைத் திருடி, தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஊர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது, காரை அங்கேயே விட்டுவிட்டு, கொள்ளையர்கள் தப்பியோடினர். அவர்களை துரத்தியபோது 5 பேரில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பிடிபட்டவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம்-திருப்பூர் சாலையில் நால்ரோடு சந்திப்பில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காரமடை போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும், தப்பியோடிய 4 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் அன்னூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT